ரூ.62 ஆயிரம், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.62 ஆயிரம் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-07 23:00 GMT

போளூர்,

போளூர் முனியந்தாங்கல் அருகே நேற்று அதிகாலையில் வேளாண் உதவி இயக்குனர் ஏழுமலை தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மினிவேனில், 61 ஆயிரத்து 835 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மினிவேனில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்த பழ வியாபாரி சபரி என்பதும், போளூர் பகுதியில் உள்ள கடைக்கு பழ வகைகளை கொடுத்துவிட்டு வேலூர் நோக்கி சென்றதும் தெரியவந்தது. ஆனால் பணத்திற்கு உண்டான ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, போளூர் தாசில்தார் ஜெயவேலுவிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல வேளாண் உதவி இயக்குனர் குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நெடுங்குணம் கிராமத்தின் அருகே சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில் மேல்மலையனூர் தாலுகா பின்னலூர் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது 34) என்பவர் ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்தார்.

இதனையடுத்து அதிகாரிகள் ஜெலட்டின் குச்சிகளையும், வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரவிக்குமாரை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்