பாணாவரத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பாணாவரத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-07 22:15 GMT
பனப்பாக்கம், 

பாணாவரம் ஊராட்சியை சேர்ந்த ரசூல்பேட்டை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

இதுபற்றி பொதுமக்கள் டேங்க் ஆபரேட்டர், பாணாவரம் ஊராட்சி செயலாளர் மற்றும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று ரசூல்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஊருக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாணாவரம் ஊராட்சி செயலாளர் பிச்சாண்டி மற்றும் பாணாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் பிச்சாண்டி குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்