வந்தவாசியில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

வந்தவாசியில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-07 22:15 GMT
வந்தவாசி,

வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு குடிசை மாற்றும் வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது, இதில் 144 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நகராட்சி சார்பில் 3 பொது குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொது குழாய்களில் வரும் குடிநீர் சிறிது நேரத்திலேயே நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த குடியிருப்பை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் வந்தவாசி 5கண் பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குடியிருப்பு பகுதிக்கு தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்