காவேரிப்பட்டணம் அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு

காவேரிப்பட்டணம் அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-07 22:30 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியாக காப்பாட்சியர் கோவிந்தராசு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன், ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, செயலாளர் டேவீஸ் ஆகியோரது ஏற்பாட்டின் பெயரில், காவேரிப்பட்டணத்தை அடுத்த பனகமுட்லு கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவரது மாந்தோப்பில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன் கூடிய நடுகல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நடுகல்லில் வீரன் ஒருவன் வில்லேந்தி போரிடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்புறம் 9 வரிகளில் கல்வெட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது பனகமுட்லு என்று அழைக்கப்படும் இந்த ஊர் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல் என்று அழைக்கப்பட்ட செய்தி தெரிய வந்துள்ளது.

அப்போது இந்த ஊரின் மீது படையெடுத்து வந்த தாமய தண்ணாக்கன் என்பவரது படையை அழித்து, தானும் இறந்து போனான் படலன் என்ற வீரன். அவரது உயிர்த் தியாகத்தினை போற்றும் வகையில், அவரது உருவத்தை கோவிந்தாண்டை காணிகாத்தான் என்பவர் கல்லில் வடிக்க செய்தார். இந்த கல்வெட்டு அருகில் இரண்டு நடுகற்கள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த கல்வெட்டு குறித்து தமிழ்செல்வன், மதிவாணன், காவேரி, ரவி, விஜயகுமார், பிரகாஷ், கணேசன், விமலநாதன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்