பேராவூரணி அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

பேராவூரணி அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-07 23:00 GMT
பேராவூரணி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை குழுவினர் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பேராவூரணி அருகே கொள்ளுக்காடு கூட்டுறவு அங்காடி பகுதியில் பறக்கும் படையை சேர்ந்த பேராவூரணி வட்டார வளர்ச்சி அதிகாரி சடையப்பன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை வழிமறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் மினி லாரியை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கல்குளம் பகுதியை சேர்ந்த ராசு என்பவரிடம் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 850 இருப்பது தெரியவந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணம் அவரிடம் இல்லை.

இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணம் பேராவூரணி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தாசில்தார் ஜெயலட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் யுவராஜ், மண்டல துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. 

மேலும் செய்திகள்