திருச்சியில் ரோட்டில் பிரிவு உபசார கொண்டாட்டம்: பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டிய கல்லூரி மாணவர்கள்

திருச்சியில் கல்லூரி மாணவர்கள் பிரிவு உபசார நிகழ்ச்சியை ரோட்டில் பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2019-04-07 23:15 GMT
திருச்சி,

சென்னையில் பிரபல ரவுடி பினு, தனது பிறந்தநாளின் போது பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய ரவுடி ஒருவரும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் திருச்சியில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியுடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விவரம் வருமாறு:-

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆண்டு வகுப்புகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதையொட்டி எம்.காம் 2-ம் ஆண்டு மாணவர்கள் பிரிவு உபசார நிகழ்ச்சியை கல்லூரி நுழைவு வாயில் அருகே உள்ள ரோட்டில் கொண்டாடினர். அவர்கள் ஒரு மொபட் மீது பெரிய அளவிலான கேக்கை வைத்து அதனை பட்டா கத்தியால் வெட்டி கொண்டாடினர். அப்போது மாணவர்கள் உற்சாகத்தில் குரல் எழுப்பினர்.

பட்டா கத்தியை ஒருவர் மாற்றி ஒருவர் வாங்கி ‘கேக்’ வெட்டினர். மாணவர்கள் பட்டா கத்தியுடன் ரோட்டில் நின்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொண்டாட்டத்தின் போது சக மாணவர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவால் கல்லூரி நிர்வாகத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுவாக சென்னையில் தான் சில கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியுடன் கல்லூரிக்கு செல்வதும், சண்டையிடும் சம்பவமும் நடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது திருச்சியிலும் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை கையில் எடுக்கும் கலாசாரத்தை தொடங்கி வைத்துள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருவதால் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்