அறந்தாங்கி அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவது தடுக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்ப்பு

அறந்தாங்கி அருகே உள்ள வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவது தடுக்கப்படுமா? என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Update: 2019-04-07 22:45 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியான மாவட்டம் ஆகும். இங்கு சராசரி மழையளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளில் குறிப்பிட்ட மாதங்கள் மட்டும் தண்ணீர் காணப்படும். மற்ற நாட்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும். இதை பயன்படுத்தி சிலர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்று பகுதிகளில் அனுமதியின்றி மணல்களை கடத்தி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில் செல்லும் சாலையில் வெள்ளாறு உள்ளது. இந்த வெள்ளாற்றில் தற்போது அதிக அளவில் கருவேல மரங்கள் காணப்படுகிறது. இதனால் வெள்ளாறு பகுதியில் காடுபோல் காட்சி அளிக்கிறது. இதை பயன்படுத்தி சிலர் பகல் நேரங்களில் பொக்லைன் எந்திரம் மற்றும் கூலி தொழிலாளிகள் உதவியுடன் வெள்ளாற்று பகுதியில் உள்ள மணலை வெட்டி மலைபோல் குவித்து வைக்கின்றனர்.

பின்னர் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள், டிராக்டர், லாரிகள் போன்றவற்றை ஆற்றுக்குள் இறக்கி, பகலில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு உள்ள மணல்களை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கடத்தி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தற்போது வெள்ளாற்று பகுதியில் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வெள்ளாற்றில் நடைபெறும் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் வெள்ளாற்றில் அதிக அளவில் வளர்ந்து உள்ள கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், அறந்தாங்கி-ஆவுடையார்கோவில் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள பாலத்தில் இருந்து பார்த்தால், ஆற்றில் ஒரு லாரி நின்றால் கூட தெரியாத அளவுக்கு அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதை பயன்படுத்தி பலர் பகல் மற்றும் இரவு வேளைகளில் அதிக அளவில் மணலை கடத்தி வருகின்றனர். இது போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் பணத்தை வாங்கி கொண்டு மாதத்திற்கு ஒருமுறை ஒரு மாட்டுவண்டி அல்லது ஒரு லாரியை மட்டும் பறிமுதல் செய்து கணக்கு காட்டி வருகின்றனர். எனவே மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்றால், வெள்ளாற்றில் உள்ள அனைத்து கருவேல மரங்களையும் அகற்றினால், அந்த வழியாக செல்பவர்களுக்கு வெள்ளாற்றில் மணல் அள்ளுவது தெரியும். இதனால் மணல் கடத்தல் தடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்