மாதிரி வாக்குச்சாவடி மூலம் விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

Update: 2019-04-07 22:30 GMT
புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கு வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். தாசில்தார் பரணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன், கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் உள்பட அரசு அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தின் முன்பு விழிப்புணர்வு மணி ஒன்று அமைத்திருந்தனர். அந்த மணி அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டு இருந்தது. மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். அப்போது அவர்கள் வாக்குச்சாவடி முன்பு அமைக்கப்பட்டு இருந்த மணியை ஒருமுறை அடித்த பின்னரே வாக்கு செலுத்தினர். முன்னதாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் பரணி ஆகியோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ண பலூன்களை பறக்க விட்டனர். 

மேலும் செய்திகள்