கொள்ளிடம் அருகே கல்லூரி மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

கொள்ளிடம் அருகே கல்லூரி மாணவியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கைதான வாலிபர் ஏற்கனவே 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Update: 2019-04-08 22:15 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டார பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் கல்லூரிக்கு சென்ற அந்த மாணவி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார்.

அதில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வண்டிகேட் பள்ளிப்படையை சேர்ந்த அன்பழகன் மகன் சுபாஷ் சந்திரன்(வயது 23) என்பவர் தனது மகளை கடத்தி சென்றதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாயமான தனது மகளை மீட்டு தரும்படியும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் புகார் கொடுத்து 3 மாதங்களாகியும் அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடிக்கவில்லை.

இதனையடுத்து அந்த பெண்ணின் தாய், சென்னை ஐகோர்ட்டில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த ஐகோர்ட்டு, அந்த பெண்ணை நேரில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாயமான கல்லூரி மாணவியும், சுபாஷ்சந்திரனும் திருப்பூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் திருப்பூருக்கு சென்று 2 பேரையும் போலீசார் கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து சுபாஷ்சந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், 18 வயது நிறைவு பெறாத கல்லூரி மாணவியை பல மாதங்களாக காதலித்து வந்ததாகவும், ஒரு கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதேபோல் சுபாஷ்சந்திரன், 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ்சந்திரனை கைது செய்தனர். ஆட்கொணர்வு மனுவின்படி போலீசார், அந்த பெண்ணை சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்