தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்தான திட்டங்களை தடுப்பதற்கு ஏன் அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை - வைகோ கேள்வி

தமிழ்நாட்டுக்கு வருகிற ஆபத்தான திட்டங்களை தடுப்பதற்கு ஏன் அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை என்று வெள்ளகோவிலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் வைகோ கேள்வி எழுப்பினார்.

Update: 2019-04-08 23:15 GMT

காங்கேயம்,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க.வேட்பாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திறந்த வேனில் வெள்ளகோவில் சந்திப்பில் நேற்று இரவு பேசியதாவது:–

தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி. நம் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது. இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு பாசிச வெறியாட்டம் இந்தியாவிலேயே நடக்கும். இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள் என்று தந்தை பெரியார் கூறினார். உலகம் போற்றும் உத்தமர் காந்தியை இப்பொழுதும் நாங்கள் சுட்டுக் கொல்கிறோம் என்று வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கட்சியினர் அவரை சுட்டு கொல்வது போல ஒரு நிகழ்ச்சியைக் கூட நடத்தினார்கள். ஆனால் மோடி அரசு இதை கண்டுகொள்ளவில்லை. அவரை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க போகிறோம் என்று கூறுகின்றனர். இதற்கு எந்த கண்டனமும் பிரதமர் தெரிவிக்கவில்லை.

அனைத்து மதத்தினரும் அந்தந்த வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். ஆனால் மதச்சார்பின்மை என்ற ஒற்றை வார்த்தையை நீக்கிவிட்டு ஒற்றை மதம், ஒற்றை மொழி என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பல்வேறு தலைவர்கள் ரத்தத்தை சிந்தி வளர்த்த திராவிட இயக்கம் இது. பலம் வாய்ந்த இந்த தமிழகத்தை அழிப்பதற்காகவே ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு எப்படி மத்திய அரசு இடம் கொடுத்தது. அதை கட்டிவிட்டு முல்லைப் பெரியாறு அணையை இடிப்போம் என்ற நிலையில் கேரள அரசு இருந்து வருகிறது. இவ்வாறு இடிக்கப்பட்டால் தமிழகத்தின் 5 மாவட்டங்கள் முழுவதும் பாலைவனம் ஆகும். நரேந்திர மோடியின் ஆட்சியில் நாம் வஞ்சிக்கப்பட்டு உள்ளோம். பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாய் சீரமைப்புக்காக தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணிகள் நடைபெற்றது.

மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசாக இருந்து வருகிறது. விவசாய கடன்களை கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்தான திட்டங்களை தடுப்பதற்கு ஏன் அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை. ஏனென்றால் அவர்கள் உச்சி முதல் பாதம் வரை ஊழல் புதை மணலில் சிக்கி இருக்கிறார்கள். ஆகவே அதைப் பற்றி மத்திய அரசிடம் கேட்பதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை. விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரங்களை கொண்டு சென்று விவசாய நிலங்களை அழிக்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளுக்கு இங்கிருந்து தரை வழியாக மின்சாரத்தை கொண்டு செல்லும் போது, ஏன் ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு தரைவழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல முடியாது.

மத்திய அரசின் தவறான கொள்கையால் சுமார் 50 ஆயிரம் சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். தமிழகத்தில் வர இருந்த பல முன்னணி நிறுவனங்கள் தமிழக அரசின் கமி‌ஷன் தொகை விவகாரத்தால் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டது. தமிழக அரசு அடிபணிந்து மத்திய அரசுக்கு சேவை செய்து வருவதால் தான் நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு தமிழகத்தை பழி வாங்கிக் கொண்டிருக்கிறது. உலகமெல்லாம் சுற்றி வரும் மோடி தமிழகத்தில் இயற்கை பேரழிவு வந்தபோது ஒரு இங்கல் கூட தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டிக கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கர்நாடகத்துக்கு அனுமதி கொடுத்தது. மேகதாது அணை கட்டப்பட்டால் பசுமை நிறைந்த மாநிலம் பாலைவனம் ஆகும். அப்போது அந்த நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பறித்து பெரும் முதலாளிகளுக்கு கொடுத்து விடலாம் என்ற சிந்தனையிலேயே இருந்து வருகிறது.

மத்திய அரசின் நீட் தேர்வு கொள்கையால் பல இளைஞர்களின் டாக்டர் கனவு சின்னாபின்னமாகி உள்ளது. தூத்துக்குடியில் அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பல பொது மக்களைக மத்திய அரசு கொன்றது. இதற்கு அ.தி.மு.க.வும் துணை நின்றது. இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும். ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட புராதன சின்னங்கள் அனைத்தும் கிமு. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த அளவுக்கு பழமை வாய்ந்த நாகரிகம் தமிழகத்தில் இருந்துள்ளது. தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கல்வி கடன், விவசாய கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல 5 பவுன் தங்க நகைக்கு கீழ் அடகு வைத்திருப்பவர்களுக்கு அது தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் உதயசூரியன் சின்னத்திற்கு அனைவரும் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதை தொடர்ந்து வைகோ காங்கேயத்திலும் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்