தஞ்சையில், மினிலாரியில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல்

தஞ்சையில், மினிலாரியில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-08 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? விடுதிகள், திருமண மண்டபங்களில் பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா? வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வாகனங்களில் பணம் கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தஞ்சை மாவட்டத்தில் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல 8 நிலையான கண்காணிப்பு குழுக்களும், வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் காலை, மாலை, இரவு என சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே கரூப்ஸ் நகரில் பறக்கும் படை அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு மினி லாரியை பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் மினி லாரியில் இருந்த தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்த வியாபாரி கோபியிடம்(வயது 33) ரூ.2 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணம் குறித்து கேள்வி எழுப்பியபோது திருச்சியில் காய்கறி வாங்குவதற்கு கொண்டு செல்வதாக கோபி பதில் அளித்தார். ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாசில்தார் அருணகிரியிடம் ஒப்படைத்தனர்.அவர், வருவாய் கோட்டாட்சியர் சுரேசிடம் ஒப்படைத்தார். இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு அலுவலர்கள் அறிவுறுத்தினர். உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்படவில்லை என்றால் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்