மின் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

செந்துறை- உடையார்பாளையம் சாலையில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் 23 ஆண்டுகளாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

Update: 2019-04-08 22:45 GMT
செந்துறை,

செந்துறை- உடையார்பாளையம் சாலையில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் 23 ஆண்டுகளாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் முன்பு செந்துறை சித்தேரி கரையில் வசித்து வந்தனர். ஏரியில் அதிகளவில் நீர் வந்ததை அடுத்து தற்போது உடையார்பாளையம் சாலையில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட கலெக்டரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் மின்சாரம் பெற முடியாமல் உள்ளனர். அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கிடைத்தும் அதனை பயன்படுத்த மின் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இவர்கள் வசிக்கும் பகுதி அருகே நீரோடை இருப்பதால் இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் வீட்டுக்குள் வந்து விடுகின்றன. இந்த நிலையில் மின் வசதி கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ராந்தல் விளக்கு வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் செந்துறை- உடையார்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்