கம்பம்மெட்டு மலைப்பாதையில் காட்டுத்தீ - கனரக வாகனங்கள் செல்ல தடை

கம்பம்மெட்டு மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் கனரக வாகனங்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-08 22:30 GMT
கம்பம்,

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் நெடுங்கண்டம், கட்டப்பனை, இடுக்கி போன்ற முக்கிய பகுதிகளுக்கு கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கம்பத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் கேரளாவை சென்றடையும் இந்த மலைப்பாதை கம்பம் மேற்கு வனச்சரகத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாக செல்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு கம்பம்மெட்டு மலைப்பாதையில் உள்ள 4-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதனால் அனல் வீசியதால் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கம்பம் மேற்கு வனச்சரக ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தீ எரிவதால் பாதுகாப்பு நலன் கருதி கம்பம்மெட்டு மலைப்பாதையில் எளிதில் தீப்பற்றக்கூடிய வைக்கோல் லாரி, எரிபொருள் நிரப்பி செல்லும் டேங்கர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். மலைப்பாதையில் இலகு ரக வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்