திருத்தணியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

திருத்தணியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-09 22:45 GMT
திருத்தணி,

திருத்தணி கார்த்திகேயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்றும், பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்கவேண்டும் என்றும் கூறி திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருத்தணி போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் முறையாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து பேச வேண்டும் என கூறி மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதைதொடர்ந்து திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் லதா அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் அனைவரும் வட்டாரவளர்ச்சி அலுவலகம் உள்ளே சென்று அங்கும் காலிகுடங்களை காட்டி தங்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை சமாதானப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்