மணல் கடத்தல்; சிறுவன் உள்பட 4 பேர் கைது 2 மாட்டு வண்டிகள்-சரக்கு வேன் பறிமுதல்

மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 2 மாட்டு வண்டிகள், சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-04-09 22:15 GMT
அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அய்யம்பேட்டை அருகே மாத்தூர் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக 2 மாட்டு வண்டிகள் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தன. அதை வழிமறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் மாத்தூர் குடமுருட்டி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதையடுத்து 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மாத்தூர் நடுபாதி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது24), லிங்கத்தடிமேடு கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், தேவராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அதேபோல் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பகுதியில் கும்பகோணம் தாலுகா போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. அதை வழிமறித்து போலீசார் சோதனையிட்டனர். இதில் மூட்டைகளில் ஆற்று மணல் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து சரக்கு வேனை பறிமுதல் செய்த அதிகாரிகள், மணலை கடத்தி சென்ற பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அரவிந்த் (22) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

அதே பகுதியில் மொபட்டில் மணல் மூட்டைகளை கடத்தி சென்ற 2 பேர் போலீசாரை பார்த்ததும் மொபட்டை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து போலீசார் மொபட்டை பறிமுதல் செய்து தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்