ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையிடம் டெபாசிட் இழந்தது மறந்து விட்டதா? தி.மு.க. அணிக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையிடம் டெபாசிட் இழந்ததை தி.மு.க. அணி மறந்து விட்டதா என சிவகங்கை பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

Update: 2019-04-09 23:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சிவகங்கை, திருப்பத்தூர், இளையான்குடி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இதே போல் இளையான்குடியில் மானாமதுரை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை ஆதரித்தும் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் எங்களைப் பார்த்து சுயேச்சை என்கிறது. எனவே எங்கள் சுயேச்சை வேட்பாளர்கள் 40 பேர் இந்தியாவின் பிரதமரை நிர்ணயித்தார்கள் என்ற வரலாற்றுச் சாதனையை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும். மோடியை டாடின்னு சொல்கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலில் ஜெயலலிதா அந்த மோடியா, இந்த லேடியா என்று கூறி வாக்கு சேகரித்தார். எனவே மோடியை டாடின்னு சொல்கிறவர்களை நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

எனக்கு தெரிந்து, நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து ப.சிதம்பரம் பெரிய பொருளாதார மேதை. எத்தனையோ தடவை மந்திரியாக இருந்து உள்ளார். ஆனால் சிவகங்கை எந்த வளர்ச்சியும் பெறவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது புதுக்கோட்டையில் கைப்பற்றிய சீட்டுகளை வைத்து தேர்தலை ரத்து செய்தனர். ஆனால் வேலூரில் துரைமுருகனிடம் வார்டு வாரியாக பட்டியல் எழுதி வைத்து இருந்த ரூ.30 கோடியை கைப்பற்றினார்கள். ஆனால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்படவில்லை.

8 வழிச்சாலை திட்டம் வந்தால் தமிழகத்திற்கு நல்லது என்ற சட்டசபையில் கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு மக்களின் எதிர்காலம், விவசாயிகளின் எதிர்காலம் பற்றி கவலை இல்லை. ஆனால் இப்போது கோர்ட்டே 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க தடை விதித்து விட்டது.

இந்து மதத்தை யாரும் உருவாக்கவில்லை.

அதை யாரும் அழிக்கவும் முடியாது. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு கூட யாரும் செல்லவில்லை. ஜெயலலிதாவை எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் மறந்து விட்டனர். இந்த தேர்தல் முடிந்த உடன் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் நம் பக்கம் வந்து விடுவார்கள்.

50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. இனியா செய்ய போகிறார்கள்? அவர்கள் நம்மை பார்த்து சுயேச்சை என்கிறார்கள். ஆர்.கே.நகரில் இந்த சுயேச்சையிடம்தான் தி.மு.க. டெபாசிட் இழந்தது. அது மறந்து போய் விட்டதா? நீட் தேர்வு வேண்டும் என்று ப.சிதம்பரத்தின் மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதனால் இன்று மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். பிரதமரை தேர்வு செய்யும் இடத்தில் நாம்தான் இருக்க வேண்டும். யாரிடமும் சமரசம் செய்யாமல் போராடுபவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.

மேலும் செய்திகள்