வழக்குகளை தீர்வுகாண பொதுமக்கள் சமரச மையத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு

வழக்குகளை தீர்வு காண பொதுமக்கள் சமரச மையத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி கூறினார்.

Update: 2019-04-10 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் நீதிமன்ற வளாகத்தில் சமரச மையத்தின் 14-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆதி காலத்திலேயே பஞ்சாயத்து முறைகள் இருந்துள்ளன. கிராம பஞ்சாயத்துகள் சிறப்புமிக்கவை. நீதி, நேர்மை, நியாயத்தை மையப்படுத்தியே இருதரப்பினரிடமும் பேசப்படும். இதனால் இருதரப்பினரிடமும் உறவுமுறையிலும் பிணக்கு ஏற்படாது. இந்த பஞ்சாயத்துக்களில் சில மாற்றங்களுடன் செயல்படுவதே சமரச மையம் ஆகும்.

சமரச மையம்

இதில் நீதிபதிகள், வக்கீல்கள், வழக்காடிகள் ஆகியோரே முக்கியமானவர்கள். இங்கு 40 மணி நேரம் பயிற்சி பெற்ற மீடியேட்டர் என்பவர் இருப்பார். இருதரப்பினரையும் அமரவைத்து பேசுவார்கள். அடுத்து தனித்தனியாக அவர்களிடம் கருத்து கேட்கப்படும். அவர்களுக்கு பொதுவான, சமரசமான தீர்வு வழங்கப்படும். அதில் சிக்கல் ஏற்பட்டால் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். எனவே பொதுமக்கள் வழக்குகளை தீர்வு காண சமரச மையத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மகிளா நீதிபதி பக்கிரிசாமி, குற்றவியல் நீதித்துறை தலைமை நீதிபதி ராஜேந்திரன், குற்றவியல் நீதித்துறை நீதிபதி குமார், உரிமையியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்