கோவூரில் வாகன சோதனை ஏ.டி.எம். பணம் ரூ.1¼ கோடி பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

கோவூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1 கோடியே 26 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-10 22:45 GMT

ஆலந்தூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி எழிலரசி தலைமையிலான பறக்கும் படையினர் மவுலிவாக்கம் அருகே உள்ள கோவூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள், ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர்களான தினேஷ், வினோத் என்பதும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து காரில் இருந்த ரூ.1 கோடியே 26 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை ஆலந்தூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்