அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் அமைச்சர் தங்கமணி தகவல்

அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2019-04-10 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் காளியப்பன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று (வியாழக்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

இது தொடர்பாக தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது :-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, திறந்த வேனில் சென்று அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க உள்ளார்.

ராசிபுரம் எம்.ஜி.ஆர். சிலை அருகே இன்று காலை 8.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் முதல்-அமைச்சர், சேந்தமங்கலம் தேர்முட்டி அருகே 9.30 மணி அளவிலும் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்ய உள்ளார்.

இதேபோல் நாமக்கல் மதுரை வீரன் கோவில் அருகே 10.30 மணி அளவிலும், பரமத்திவேலூர் சிவா தியேட்டர் அருகில் 11.30 மணி அளவிலும், திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் 12.30 மணி அளவிலும் அவர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதில் அ.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பம்பாடி, பனிக்கனூர், எலவம்பட்டி, எடையப்பட்டி, துட்டம்பட்டி, குருக்குப்பட்டி மற்றும் தாரமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அவருடன் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர். ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்