குடகில், காபித்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பண்ணை குட்டையில் சிக்கிய 5 காட்டுயானைகள் மீட்பு

குடகில், காபித்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பண்ணை குட்டையில் சிக்கிய 5 காட்டுயானைகளை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்.

Update: 2019-04-10 23:35 GMT

குடகு, 

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது பாலங்காலா கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விராஜ்பேட்டை வனப்பகுதியில் இருந்து 5 காட்டுயானைகள் வெளியேறின. அவைகள் தண்ணீரைத் தேடி பாலங்காலா கிராமத்திற்குள் புகுந்தன.

பின்னர் அவைகள் கிராமத்தையொட்டி அமைந்துள்ள ஒரு காபித்தோட்டத்திற்குள் புகுந்து, அங்கிருந்த பண்ணைக் குட்டையில் தண்ணீர் குடிக்க முயன்றன. அப்போது எதிர்பாராத விதமாக 5 காட்டுயானைகளும் குட்டைக்குள் விழுந்துவிட்டன.

பின்னர் அவைகள் குட்டையில் இருந்து மேலே வர முயற்சித்தன. ஆனால் முடியவில்லை. இதனால் அவைகள் குட்டையிலேயே சிக்கி தவித்துக்கொண்டிருந்தன. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்ற கிராம மக்கள், காட்டுயானைகள் குட்டையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் காட்டுயானைகளை மீட்பதற்காக அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி அவர்கள் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, அதன் உதவியுடன் குட்டையில் இருந்து யானைகள் வெளியே வர வழி அமைத்தனர்.

அதன் வழியாக 5 காட்டுயானைகளும் வெளியே வந்து பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதைப்பார்த்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கிராமத்திற்குள் காட்டுயானைகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வனத்துறையினர் காட்டுயானைகள் கிராமத்திற்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்