தானேயில் 1½ வயது பெண் குழந்தையை கடத்திய சிறுமி உள்பட 2 பேர் கைது

தானேயில் கடத்தப்பட்ட 1½ வயது பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக சிறுமி உள்பட 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

Update: 2019-04-11 23:40 GMT
தானே,

தானே கிழக்கு கோப்ரி பகுதியில் உள்ள நடைபாதையில் வசித்து வரும் பெண் ராதா(வயது27). இவருக்கு 1½ வயதில் பூஜா என்ற பெண் குழந்தை உள்பட 2 குழந்தை உள்ளனர். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் ராதா குழந்தைகளுடன் தூங்கி கொண்டு இருந்தார்.

காலை எழுந்த போது, அருகில் படுத்து இருந்த குழந்தை பூஜாவை காணவில்லை. இதனால் பதறி போன ராதா பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர்.

இதில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவள் குழந்தை பூஜாவை தூக்கி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.


இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த சிறுமியை கண்டுபிடித்தனர். மேலும் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் குழந்தையை மும்பை கோவண்டியை சேர்ந்த பெண் சாயிஸ்தா சேக் (30) என்பவரிடம் கொடுத்ததாக தெரிவித்தாள். அதன்பேரில் போலீசார் சாயிஸ்தா சேக்கை கைது செய்து அவரிடம் இருந்து குழந்தை பூஜாவை மீட்டு ராதாவிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் போது, திருமணமாகி குழந்தை இல்லாததால் கடத்தியதாக சாயிஸ்தா சேக் போலீசாரிடம் தெரிவித்தார்.

குழந்தை பூஜாவை கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்