பிரசாரத்தின் கடைசி நாளில் அனுதாப ஓட்டுகளை பெற சுமலதா ரகசிய திட்டம் : குமாரசாமி வெளியிட்ட பகீர் தகவல்

பிரசாரத்தின் கடைசி நாளில் சுயேச்சை வேட்பாளர் சுமலதா, கல்லால் தாக்கிக்கொண்டு அனுதாப ஓட்டுகளை பெற ரகசிய திட்டமிட்டு இருப்பதாக குமாரசாமி பகீர் தகவலை கூறியுள்ளார்.

Update: 2019-04-12 00:19 GMT
பெங்களூரு,

மண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை சுமலதா, சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் மண்டியா தொகுதியில் மகன் நிகில் குமாரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். நேற்று 2-வது நாளாக அவர் மகனுக்கு ஆதரவாக மண்டியாவில் வாக்கு சேகரித்தார். கஜ்ஜலகெரேயில் பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:-

வருகிற 16-ந் தேதி தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள். அன்றைய தினம் சுயேச்சை வேட்பாளர் சுமலதா, தனது ஆதரவாளர்கள் மூலம் கல்லால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் மக்களின் அனுதாபத்தை தேடுவார் என்று எனக்கு தகவல்கள் வந்துள்ளன.

நிகில் குமாரசாமியை தோற்கடிக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. சதி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சுயேச்சை வேட்பாளரின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்கவில்லை.

ஓட்டுகேட்டு அவர் வரும்போது, உங்களின் இன்னொரு முகத்தை காட்டுங்கள் என்று நீங்கள் கேளுங்கள். அவரை பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும். அதை இப்போது சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.

எனது மகனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாவட்டத்திற்கு அதிக நிதியை நான் ஒதுக்கவில்லை. சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி இந்த மாவட்டத்தில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதற்கான நன்றிக்கடனை செலுத்தும் நோக்கத்தில் தான் இந்த மாவட்டத்திற்கு அதிக நிதியை ஒதுக்கினேன்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

மேலும் செய்திகள்