நாளை மறுநாள் முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குகிறது - கலெக்டர் சுப்பிரமணியன் தகவல்

நாளை மறுநாள் முதல் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-04-12 22:15 GMT
விழுப்புரம்,

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதும் (திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன் பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள இந்த தடை ஆணையின்படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மேற்கண்ட தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கும் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான இந்த நாட்களில், மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் யாரும் விசைப்படகுகள், இழுவலை படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்