நாமக்கல், சேந்தமங்கலத்தில் அரசு ஒப்பந்ததாரர், உறவினர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை

நாமக்கல், சேந்தமங்கலத்தில் அரசு ஒப்பந்ததாரர், அவருடைய உறவினர் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2019-04-12 23:00 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள நடுக்கோம்பையை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அரசின் பொதுப்பணித்துறையில் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவரின் (பி.எஸ்.கே.)கட்டுமான நிறுவனம் அரசு கட்டிடங்களின் கட்டுமான பணிகளை ஒப்பந்த முறையில் எடுத்து கட்டி வருகிறது.

இந்தநிலையில் பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நடுக்கோம்பையில் உள்ள ஒப்பந்ததாரர் பெரியசாமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நேற்று 2 குழுவாக பிரிந்து திடீர் சோதனை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

இதே போல நாமக்கல்லில் உள்ள பெரியசாமியின் உறவினர் செல்வகுமாரின் அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கோவை வருமானவரித்துறையை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். இதில் செல்வ குமாரின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்ததாக கூறப்படுகிறது.

காலை 8 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு 8 மணிக்கு மேலாக நீடித்தது. இந்த திடீர் சோதனை காரணமாக நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்