நீடாமங்கலத்தில், என்ஜின் பழுதடைந்ததால் ரெயில்கள் தாமதம் - ரெயில்வேகேட் மூடப்பட்டதால் சாலை போக்குவரத்து பாதிப்பு

நீடாமங்கலத்தில் என்ஜின் பழுதடைந்ததால் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதேபோல ரெயில்வேகேட் மூடப்பட்டதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-12 22:30 GMT
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு வழக்கமாக நேற்று காலை 6.45 மணிக்கு மன்னார்குடியில் இருந்து மானாமதுரை செல்லும் பயணிகள் ரெயில் வந்தது. இந்த ரெயில் முதல் பிளாட்பாரத்துக்கு வந்து நின்றது. இதனை தொடர்ந்து கோவையில் இருந்து மன்னார்குடி செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு காலை 7 மணிக்கு 2-வது பிளாட்பாரத்துக்கு வந்து நின்றது. இந்த ரெயிலின் என்ஜின் மாற்றி மன்னார்குடிக்கு இயக்கப்படுவது வழக்கம். ஆனால் 3-வதாக உள்ள தண்டவாள பாதையில் சரக்கு ரெயில் நின்றதால் என்ஜின் திசை மாற்ற முயவில்லை. அதேசமயம் மானாமதுரை பயணிகள் ரெயில் புறப்பட தயாரான நிலையில் ரெயில் என்ஜின் பழுதானது.

பின்னர் தஞ்சாவூரில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு மானாமதுரை ரெயில் 7.05 மணிக்கு பதிலாக 8.40 மணிக்கு அதாவது 1 மணி 35 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதன் பின்னர் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் திசை மாற்றப்பட்டு 8.50 மணிக்கு மேல் மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. இதற்கிடையில் 8.40 மணிக்கு நீடாமங்கலம் வரவேண்டிய திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் பயணிகள் ரெயில் சாலியமங்கலத்திலும், நாகூரிலிருந்து, திருச்சி செல்லும் பயணிகள் ரெயில் கொரடாச்சேரியிலும் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டது.

இதனால் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயிலும் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதன் காரணமாக ரெயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதனால் நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் காலை 6.45 மணிக்கு மூடப்பட்டது. ரெயில்வே கேட் 2 மணி நேரமாக மூடப்பட்டிருந்ததால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் வரிசையாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதியற்ற நீடாமங்கலத்தில் காலை வேளையில் நெடுஞ்சாலை பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்வதில் பெரும் அவதிப்பட்டனர். ரெயில்வே கேட் தொடர்ச்சியாக நீண்ட நேரம் மூடப்பட்டிருந்ததால் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி உள்ளூர் மற்றும் கிராமப்புற பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் பெரும் அவதியடைந்தனர்.

இத்தகைய நிலையை போக்கிட நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியும் அதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. அதேசமயம் தஞ்சையில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான இருவழிச்சாலை பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தான் நீடாமங்கலத்தில் ஓரளவிற்கு போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்படும். மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டங்களை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்