கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது

கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Update: 2019-04-13 22:30 GMT
கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடி முனையில் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரி அமைந்துள்ளது. இங்கு கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். மேலும், அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியையும் மாலையில் சூரியன் மறையும் காட்சியை இங்கு காண முடியும். இதனால் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் இங்கு வருகிறார்கள்.

நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வந்து செல்வார்கள்.

பள்ளிகளுக்கு தற்போது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று காலையில் சூரிய உதயத்தை காண கடற்கரையில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பின்னர், அவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி மகிழ்ந்தனர்.

விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல பூம்புகார் படகுத்துறையில் காலை 6 மணி முதல் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் பயணம் செய்தனர். கடலில் நீர்மட்டம் குறைவு காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

கோடை விடுமுறையையொட்டி ஓட்டல், விடுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. பகல் வேளையில் சுட்டெரிக்கும் வெயிலால் விடுதிகளில் முடங்கி கிடக்கிறார்கள். காலை மாலை நேரங்களில் கன்னியாகுமரி கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்