கிருஷ்ணகிரி அணையில் தவறி விழுந்து பெங்களூரு கல்லூரி மாணவி பலி சுற்றுலா வந்த போது பரிதாபம்

கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவி அணையில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-04-13 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம், பெங்களூரு கல்யாண்நகர், 7-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் குரு, இவருடைய மகள் ரம்யா (வயது19). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் தனது தோழிகளுடன் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்தார்.

அவர் அணையில் உள்ள நீரினை அருகே சென்று பார்க்க சென்றார். அப்போது நிலை தடுமாறி மாணவி அணையில் இருந்து விழுந்தார். இதை பார்த்த ரம்யாவின் தோழிகள் அலறி சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கே.ஆர்.பி. அணை போலீசார் அங்கு வந்தனர்.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து அணையில் இறங்கி மாணவியை தேடினார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு மாணவி ரம்யாவின் உடல் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடலை அணை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுற்றுலா வந்த மாணவி அணையில் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்