ஆவடி அருகே 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் காப்பாற்ற முயன்ற முதியவரும் உள்ளே விழுந்து தவிப்பு

ஆவடி அருகே, 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் மற்றும் அவரை காப்பாற்ற முயன்று உள்ளே தவறி விழுந்து வெளியேற முடியாமல் தவித்த முதியவர் இருவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Update: 2019-04-13 21:54 GMT
ஆவடி,

ஆவடி ஜே.பி.எஸ்டேட், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவர், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 7). அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

வீட்டின் முன்புற பகுதியில் தரைமட்ட திறந்தவெளி உரை கிணறு உள்ளது. 3 அடி அகலம், 70 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சந்தோஷ், எதிர்பாராதவிதமாக 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் துரை(60) என்ற முதியவர், தான் ஏற்கனவே கிணறுகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வந்த அனுபவம் காரணமாக சிறுவனை மீட்பதற்காக தனது இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார்.

அப்போது அவரும் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். பின்னர் அவரால் சிறுவனை மீட்டு மேலே கொண்டு வரமுடியவில்லை. கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவனும், அவனை காப்பாற்ற முயன்ற முதியவரும் உள்ளே விழுந்து மேலே வரமுடியாமல் பரிதவித்தனர். அதற்குள் தகவல் அறிந்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.

இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துவந்து இடுப்பில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி, சிறுவனையும், முதியவரையும் உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுவன் உடலில் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரையும் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்