நாடாளுமன்ற தேர்தலில் படித்த இளைஞர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் கலெக்டர் ஷில்பா பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் படித்த இளைஞர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

Update: 2019-04-14 01:09 GMT
நெல்லை,

பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியில், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷில்பா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தேர்தல் நாள், தேர்தல் தொடர்பான தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் 1950 உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டு இருந்தது. அதை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார். மேலும் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான கையெழுத்து இயக்க முகாமை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஆயிரக்கணக்கான அலுவலர்கள், பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு, நேர்மையான முறையில் தேர்தலை நடத்திட தேவையான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நல்ல நிர்வாகத்தை மேற்கொள்ள ஏதுவாக, மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய உள்ள உன்னத தேர்தலில், 100 சதவீதம் வாக்களிக்க அனைவரும் முன்வர வேண்டும்.

குறிப்பாக, நகர்ப்புறங்களில் படித்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. எனவே, படித்த இளைஞர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரியிலும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியிலும், கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்