கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் 908 தபால் வாக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 908 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது.

Update: 2019-04-14 22:15 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தபால் வாக்கு அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் பணிபுரியும் 6,354 அரசு ஊழியர்களிடம் தபால் வாக்கு அளிக்க மனுக்கள் வழங்கப்பட்டது.

இதில் வேறு மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு அவர்களது சொந்த தொகுதியில் வாக்களிக்க 2,759 தபால் வாக்குகள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டத்தை சேர்ந்த 2,963 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தபால் வாக்குகள் அளிக்க வாக்குசீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 632 பேருக்கு நேற்றைய பயிற்சி முகாமில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 12-ந் தேதி 350 ஆசிரியர்கள், 234 அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் 6 சட்டமன்ற தொகுதிகளில் போலீசார் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மையத்தில் போலீசார் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

அதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுவரை 908 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதேபோல் இ.டி.சி. (தேர்தல் பணி சான்றிதழ்) பெற 5,577 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 5,308 பேருக்கு இ.டி.சி. வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 269 பேருக்கு தற்போது நடந்த பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. இ.டி.சி. சான்று பெற்றவர்கள் வாக்குப்பதிவு நாளன்று, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் சான்றினை ஒப்படைத்து, தங்களது வாக்கை பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்