பெரம்பலூர்- அரியலூரில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

பெரம்பலூர்- அரியலூரில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2019-04-14 22:30 GMT
அரியலூர்,

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து 40 நாட்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவர். மேலும் ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி பெரம்பலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து, ஆலயத்தில் குருத்தோலை சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் குன்னம், வேப்பந்தட்டை, பாடாலூர், மங்களமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி

இதேபோல் அரியலூரில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்திக்கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தனர்.

மேலும் செய்திகள்