காதல் திருமணம் செய்த 1½ வருடத்தில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை உறவினர்கள் சாலைமறியல்

பாணாவரம் அருகே திருமணமான 1½ வருடத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-14 22:15 GMT
பனப்பாக்கம், 

நெமிலியை அடுத்த வெளிதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52). இவருடைய மகள் அனுசுயா (23). இளம்பெண்ணான இவர் மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்த தென்னரசு என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

தென்னரசு வேலைக்கு செல்லாமல் மனைவி அனுசுயாவிடம் அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று ரூ.50 ஆயிரம் வாங்கி வா, மோட்டார்சைக்கிள் வாங்கி வா என்று கூறி அவருக்கு தென்னரசு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அனுசுயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவருடைய தாயார் ஜீவாவிற்கு, தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். நேற்று காலையில் அனுசுயா இறந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவருடைய தாயார் ஜீவா மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அனுசுயாவின் கழுத்தில் தழும்பு இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததால் அனுசுயா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து விட்டு உடல்நிலை சரியில்லை என்று கூறி தென்னரசு நாடகமாடுவதாக பாணாவரம் போலீசில் புகார் செய்தார். மேலும் அனுசுயாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

ஆனால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அனுசுயாவின் உறவினர்கள் பாணாவரம் ரெயில்வே மேம்பாலம் அருகில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார் மனு அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்