வாலிபரை சுட்டு கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை தானே கோர்ட்டு தீர்ப்பு

வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-04-14 22:30 GMT

தானே,

தானே மாவட்டம் மும்ரா அம்ருத்நகரை சேர்ந்தவர் ரபிக் (வயது30). இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி, அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான அஜ்கர் அலி என்பவருடன் சண்டை ஏற்பட்டது. இதுதொடர்பாக ரபிக் மீது அஜ்கர் அலிக்கு முன்பகை இருந்து வந்தது.

இந்தநிலையில், சம்பவத்தன்று அவரை பழிவாங்குவதற்காக அஜ்கர் அலி, ஆட்டோ டிரைவர் சலீம் அப்துல் மஜித் என்பவருடன் சேர்ந்து ரபிக்கை ஆட்டோவில் அழைத்து சென்றார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு இருவரும் சேர்ந்து ரபிக்கை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர்.

இதில் படுகாயமடைந்த ரபிக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆட்டோ டிரைவர் சலீம் அப்துல் மஜித் மற்றும் அஜ்கர் அலி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவில், அவர்கள் 2 பேர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, ரபிக்கை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்