ஓமலூர் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல் 2 இடங்களில் நடந்தது

ஓமலூர் அருகே 2 இடங்களில் கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-15 22:30 GMT
ஓமலூர்,

ஓமலூரை அடுத்த தும்பிபாடி ஊராட்சிக்கு உட்பட்ட சரக்கபிள்ளையூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இது குறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், தும்பிபாடி ஊராட்சி செயலாளரிடமும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சரக்கபிள்ளையூரில் உள்ள தும்பிபாடி ஊராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். அங்கு சின்னப்பட்டி ரோட்டில் அவர்கள் திடீரென அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், தீவட்டிப்பட்டி-தர்மபுரி சாலையில் உள்ள ஜோடுகுளிபுதூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை. இது குறித்து காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், குண்டுக்கல் ஊராட்சி செயலாளரிடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று காலையில் தீவட்டிப்பட்டி-தர்மபுரி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ், தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்