வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவியை தேர்தலுக்கு பின்பு அரசு வழங்கும் சேலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் உறுதி

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தேர்தலுக்கு பின்பு, ரூ.2 ஆயிரம் நிதியுதவியை தமிழக அரசு வழங்கும் என்று சேலத்தில் பிரசாரம் செய்த அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் உறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

Update: 2019-04-15 22:15 GMT
சூரமங்கலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். வக்கீலான இவர், நேற்று சேலம் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களிடம் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், அ.தி.மு.க. ஆட்சியில் வக்கீல்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுபோல் மேலும், பல திட்டங்கள் செயல்படுத்த அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து வக்கீல்கள் மத்தியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் பேசும் போது, ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வக்கீல்களுக்கு சேம நலநிதியை உயர்த்தி வழங்கியுள்ளார். கோர்ட்டில் வக்கீல்கள் ஓய்வு எடுக்க தனி அறை மற்றும் டைனிங்ஹால் ஆகியவை கட்டி கொடுத்துள்ளார். இதுதவிர, இன்னும் பல திட்டங்கள் வக்கீல்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும். இதற்கு நீங்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.

இதையடுத்து சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தேர்தலுக்கு பின்பு ரூ.2 ஆயிரம் நிதியுதவியை தமிழக அரசு வழங்கும். ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் கிடைத்திடவும், உங்களுக்கு உழைத்திடவும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், என்றார்.

இந்த பிரசாரத்தில், முன்னாள் அமைச்சர் பொன்னையன், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., வக்கீல் பிரிவு செயலாளர் அய்யப்பமணி, வக்கீல்கள் கண்ணன், குணசேகரன், கலைச்செல்வி, விவேகானந்தன், கலையமுதன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் வக்கீல் செல்வம், பா.ம.க. மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட தலைவர் கோபிநாத் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்