வர்த்தக நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் தொழிலாளர் துறை சார்பில் நடந்தது

வர்த்தக நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம், தொழிலாளர் துறை சார்பில் நடந்தது.

Update: 2019-04-15 23:00 GMT
தஞ்சாவூர்,

வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வர்த்தக நிறுவனங்களில் தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தர விட்டார்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஜவுளி கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை ஆனந்தம் சில்க்சில் நடந்த பிரசார நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் கவிஅரசு கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்ட பைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து ஊழியர்கள் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், தங்கப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிரசாரத்தின்போது தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும்படி வர்த்தக நிறுவனங்கள், வர்த்தக சங்கங்களுக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

மேலும் செய்திகள்