சேலம் கந்தம்பட்டியில் அ.தி.மு.க. வார்டு செயலாளர் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை ரூ.3¼ லட்சம் சிக்கியது

சேலம் கந்தம்பட்டியில் அ.தி.மு.க. வார்டு செயலாளர் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.3¼ லட்சம் சிக்கியது

Update: 2019-04-15 22:30 GMT
சேலம், 

சேலம் கந்தம்பட்டி மூலப்பிள்ளையர் கோவில் பகுதியில் இருந்து நேற்று இரவு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு புகார் எண்ணிற்கு ஒருவர் பணப்பட்டுவாடா தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பறக்கும் படையினர், துணை ராணுவத்தினர் உதவியுடன் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.

இதைத்தொடர்ந்து 24-வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் முத்துசாமி என்பவர் வீட்டின் அருகே பறக்கும் படையினர் சென்றனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று சோதனை நடத்துவது தொடர்பாக அவர்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு மேற்கு தொகுதி தாசில்தார் வள்ளி தேவி வந்தார்.

பின்னர் அவர் தலைமையில் பறக்கும் படையினர் முத்துசாமி வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அங்கு அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே சோதனைக்கு முன்பு அந்த வீட்டில் இருந்த ஒரு மொபட்டு 3 முறை வெளியே சென்று வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் முத்துசாமி வீட்டில் சுமார் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் சிக்கியதாகவும், அதற்கு ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணம் ஏதும் காண்பிக்காவிட்டால் பணம் கைப்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகள்