அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து விழுந்து கேரள மாணவர் பலி

திருப்போரூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியிலிருந்து தவறி விழுந்த கேரள கல்லூரி மாணவர் தலை சிதறி பரிதாபமாக பலியானார்.

Update: 2019-04-15 22:45 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த காலவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் 14-வது மாடியில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாணவர்களான முகமது அப்ரிடி மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேர் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் பையனூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகின்றனர். தற்போது கல்லூரி விடுமுறை காலம் என்பதால் உடன் தங்கியிருந்த நண்பர்கள் 3 பேர் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதன் காரணமாக அப்ரிடி மற்றும் அவரது நண்பர் முகமது நசீர் ஆகிய இருவர் மட்டும் குடியிருப்பில் தங்கி வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் உடன் தங்கிருக்கும் நண்பர் அறையை தானியங்கி பூட்டு மூலம் பூட்டிக்கொண்டு வெளிய வந்தபோது தான் அறை சாவியை உள்ளே மறந்து வைத்துவிட்டது வந்தது அவருக்கு தெரியவந்தது.

பின்னர் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு தகவல் கொடுத்தனர். அப்ரிடி மற்றும் அவரது நண்பரும் காவலாளியிடம் கதவை திறக்க மாற்று சாவி கேட்டுள்ளனர். அடுக்கு மாடி குடியிருப்பு நிறுவனத்திடம் இருந்து முறையான தகவல் கிடைக்காததால் காவலாளிகள் கதவை திறக்காமல் தாமதம் செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் அறையினுள் மாற்று உடை உள்ளிட்ட பொருட்கள் மாட்டி கொண்டதால் தவித்து போன கல்லூரி நண்பர்கள், இருவரும் மாற்று வழியாக நேற்று மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்த கயிற்றின் மூலம் பால்கனி வழியே இறங்கி அறைக்குள் சென்று, சாவியை எடுக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து, மாணவர் அப்ரிடி மொட்டை மாடியில் கயிறுக்கட்டி இறங்கிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து 14 மாடியிலிருந்து கீழே விழுந்து தலை சிதறி இறந்துபோனார்.

இதுசம்பந்தமாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்