கோவையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க. பிரமுகர் கைது - காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் மீதும் வழக்கு

கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்றதாக காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-04-15 22:30 GMT
போத்தனூர்,

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 50). தி.மு.க. பகுதி பொருளாளராக உள்ளார். இவர் ராஜூ நாயக்கர் தோட்டம் பகுதியில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தார். இதை அந்த பகுதியை சேர்ந்த அபுபக்கர்(43) என்பவர் தட்டிக் கேட்டார். அதற்கு வரதராஜன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அபுபக்கர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வரதராஜன் மீது இந்திய தண்டனை சட்டம் 294-பி (தகாத வார்த்தைகளால் திட்டுதல்), 171 இ(தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல்) ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரிடமிருந்து ரூ.19 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

சுண்டக்காமுத்தூரை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் முருகேசன் மற்றும் 4 பெண்கள் அந்த பகுதியில் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் உள்ளனர்? என்று விவரங்களை கேட்டு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டனர்.இதை பார்த்த அ.தி.மு.க. பிரமுகரான பேரூர் ராமசெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், எதற்காக வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கிறீர்கள்? என்று அந்த பெண்களிடம் கேட்டார்.

அதற்கு அவர்கள் முருகேசன் சொன்னதின் பேரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக விவரங்களை சேகரிப்பதாக கூறினார்கள். இதுகுறித்து நடராஜன் பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் முருகேசன் மற்றும் 4 பெண்கள் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்