தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை டி.டி.வி.தினகரன் பிரசாரம்

தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

Update: 2019-04-16 22:30 GMT
திரு.வி.க. நகர்,

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்தானகிருஷ்ணன், பெரம்பூர் இடைத்தேர்தல் வேட்பாளர் வெற்றிவேல் ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் நேற்று காலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

வியாசர்பாடி, பெரம்பூர், திரு.வி.க. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், ஓட்டேரி மற்றும் அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரிசு பெட்டி சின்னத்திற்கு அவர் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தை வஞ்சிக்கின்ற மோடியும், அவருக்கு எடுபிடியாக இருக்கிற எடப்பாடி பழனிசாமியும் இந்த தேர்தலில் கூட்டணி வைத்துள்ளார்கள். தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கின்ற மத்திய அரசுடன் தமிழக நலன்களை மறந்து சுயநலத்திற்காக கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அதேபோல மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. மாநில கட்சியால் மட்டுமே தங்களது தேவைகளை போராடி பெற முடியும் என்று நீங்கள் ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்தீர்கள். அதேபோல இந்த தேர்தலிலும் நமது தேவைகளை போராடி பெற்றிட அ.ம.மு.க. பரிசு பெட்டிக்கு உங்கள் வாக்கை செலுத்தி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் ஆதரவுடன் 39 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து அ.ம.மு.க. நிர்வாகி வி.எஸ்.பாபு 4 அடி நீளமுள்ள வேல் ஒன்றை தினகரனுக்கு பரிசாக அளித்தார்.

மேலும் செய்திகள்