விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு 5 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-04-16 22:30 GMT
விழுப்புரம்,

திருக்கோவிலூர் தாலுகா டி.தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் செந்தில் (வயது 40), விவசாயி. இவருடைய தந்தை பெயரில் இருக்கும் நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த 29.11.2011 அன்று திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அப்போது அங்கு உதவியாளராக பணியாற்றி வந்த திருக்கோவிலூர் நேரு நகரை சேர்ந்த பத்மநாபன் (60) என்பவர், வாரிசு சான்றிதழ் தயாரித்து தாசில்தாரிடம் கையெழுத்து பெற்றுத்தர ரூ.500 லஞ்சமாக தர வேண்டும் என்று செந்திலிடம் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துக்கொண்டு திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பத்மநாபனிடம் கொடுத்தார். அந்த லஞ்சப்பணத்தை பத்மநாபன் வாங்கியபோது அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.தொடர்ந்து, அவர் துறை ரீதியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும்போது பத்மநாபன், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட பத்மநாபனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்