வாக்குப்பதிவின் போது 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர்கள் பயன்படுத்தலாம் தேர்தல் அதிகாரி தகவல்

வாக்குப்பதிவின் போது, 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாள அட்டையாக வாக்காளர்கள் பயன்படுத்தலாம் என்று தேர்தல் அதிகாரி கூறினார்.

Update: 2019-04-16 22:15 GMT
பெரம்பலூர்,

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,86,397 வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் சீட்டினை வழங்கும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் நடைபெற்று வருகிறது. இந்த புகைப்பட வாக்காளர் சீட்டினை அடையாள ஆவணமாக வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த இயலாது. வாக்குச்சாவடியில் வாக்களிக்க செல்லும்போது, புகைப்பட வாக்காளர் சீட்டுடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய- மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

அடையாள அட்டையாக...

மேலும் புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் அல்லது சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாள அட்டையாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்