சிவமொக்காவில் பரபரப்பு எடியூரப்பாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

சிவமொக்காவில் எடியூரப்பாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-04-16 22:30 GMT
சிவமொக்கா, 

சிவமொக்காவில் எடியூரப்பாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எடியூரப்பா தீவிர பிரசாரம்

கா்நாடகத்தில் 18 மற்றும் 23-ந்தேதிகளில் 2 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) பெங்களூரு உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கர்நாடகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா அனல் பறக்கும் பிரசாரம் செய்தார்.

2-வது கட்ட தேர்தல் நடக்கும் சிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம்.பி.யுமான ராகவேந்திரா போட்டியிடுகிறார். இதனால் அவர் தன்னுடைய மகனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் அதிகாரிகள் சோதனை

இந்த நிலையில் எடியூரப்பா, நேற்று சிவமொக்காவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி நேற்று காலை அவர், சிவமொக்காவில் இருந்து செல்லகெரே செல்ல ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்து இருந்தார். ஹெலிகாப்டர் புறப்பட தயாராக இருந்தது. அந்த சமயத்தில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் திடீரென்று எடியூரப்பாவின் ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர்.

ஹெலிகாப்டரில் இருந்த எடியூரப்பாவின் பைகளை கீழே எடுத்து அவற்றை திறந்து சோதனை செய்தனர். அந்த பைகளில் புத்தகம், துணிமணிகள் மட்டுமே இருந்தது. இதனால் தேர்தல் அதிகாரிகள் அந்த பைகளை திரும்ப ஹெலிகாப்டரில் வைத்துவிட்டனர். அதிகாரிகளுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

பரபரப்பு

இந்த சோதனையின்போது எடியூரப்பா, ஹெலிகாப்டரிலேயே அமர்ந்து இருந்தார். எடியூரப்பா செல்ல இருந்த ஹெலிகாப்டரில் நடந்த இந்த சோதனை சிவமொக்காவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்