வரிகளை உயர்த்தி விட்டு கவர்னர் மீது பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல் - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

வரிகளை உயர்த்தி விட்டு கவர்னர் மீது பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2019-04-16 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. உப்பளம் தொகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவையில் 3 ஆண்டு களாக ஆட்சி நடத்தும் காங்கிரசார் என்ன சாதனை செய்துள்ளனர்? இலவச அரிசி, துணி, செட்டாப் பாக்ஸ் கொடுத்தார்களா? முதியோர், விதவை உதவித்தொகை உயர்த்தப்பட்டதா? வீடுகட்டும் திட்டத்துக்கான நிதி உயர்த்தப்பட்டதா? சிறுபான்மையினரில் ஒருவருக்குக்கூட கடன் உதவி அளிக்கவில்லை.

அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாமல் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளமில்லை. இதற்கெல்லாம் முதல்-அமைச்சரிடம் பதில் இல்லை. மின்சார கட்டணம், குப்பை வரி, வீட்டு வரியை உயர்த்திவிட்டு கவர்னர்தான் உயர்த்தினார் என்று பழிபோடுகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல்.

முதியோர், விதவை உதவித்தொகைகள் இந்த ஆட்சியில் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. சுனாமி நிதியில் இருந்து ரூ.150 கோடியில் தரமற்ற கேபிள் புதைத்ததிலும் முறைகேடு நடந்துள்ளது. அதேபோல் சீனாவிலிருந்து ஸ்மார்ட் மின் மீட்டர் வாங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. புதுவையில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

தேர்தல் வந்தவுடன் மக்களை சந்திக்க வரும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என்றைக்காவது மக்களை நேரில் சந்தித்தது உண்டா? உப்பளம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில்தான் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கி கூரை வீடுகள், கல்வீடுகளாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சியில் யாருக்காவது பட்டா வழங்கப்பட்டுள்ளதா?

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

மேலும் செய்திகள்