பரங்கிப்பேட்டை அருகே, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை - தேர்வு எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு

பரங்கிப்பேட்டை அருகே தேர்வு எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-04-16 22:15 GMT
பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே உள்ள வடக்கு முடசல் ஓடை சூரியா நகரை சேர்ந்தவர் பாலுமகேந்திரன். இவருடைய மகன் திலீபன்(வயது 20). இவர், சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணித அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியிலேயே தங்கி கல்வி கற்று வந்தார்.

கடந்த சில நாட்களாக கல்லூரி மற்றும் விடுதி தனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னை வேறு கல்லூரியில் சேர்க்குமாறும் திலீபன் தனது பெற்றோரிடம் கூறி வந்தார். அதற்கு பெற்றோர், தொடர்ந்து இதே கல்லூரியில் படிக்குமாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை எழுதாமல் திலீபன், தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இது பற்றி கல்லூரி நிர்வாகத்தில் இருந்து பாலுமகேந்திரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், கல்லூரியில் நடந்த தேர்வை எழுதாமல் இங்கு வந்தது ஏன்? என்று கூறி கண்டித்தனர். இதனால் மனமுடைந்த திலீபன், நேற்று காலையில் பரங்கிப்பேட்டைக்கு வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு கடையில் குளிர்பானமும், மற்றொரு கடையில் மருந்தும் (விஷம்) வாங்கினார். யானைகுட்டிப்பாலம் அருகில் வைத்து திலீபன், குளிர்பானத்துடன் விஷத்தை கலந்து குடித்தார். பின்னர் மயங்கி விழுந்த அவரது, வாயில் இருந்து நுரை வெளியேறியதுடன். சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, திலீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாலுமகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்