குவாலியர் நகரும், மன்மந்திர் அரண்மனையும்

மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் குவாலியர் நகரில் அமைந்திருக்கிறது இந்த மன்மந்திர் அரண்மனை.

Update: 2019-04-17 09:20 GMT
மன்மந்திர் அரண்மனை குவாலியர் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. 1517-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனை ராஜ்புத் மன்னர்கள், முகலாயர்கள், மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என்று பலராலும் ஆளப்பட்டது. இடைக்கால கட்டுமானத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அரண் மனையின் தரைகள் வேலைப்பாடுகள் உடைய டைல்ஸ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அறைகள் சிற்ப வேலைப்பாடுடன் கூடிய கல் தூண்களுடன் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன. உட்புற சுவர்கள் விலங்குகள், பூக்கள், மனிதர்கள் என்று பலவண்ண சிற்பங்களால் நிரப்பப்பட்டுள்ளன. சித்திரங்கள் நிறைந்து காணப்படுவதால் இது சித் மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனைக்கு நான்கு தளங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு நிலத்தடியில் உள்ளன. வெளிப்புற தோற்றத்தில் வட்டவடிவிலான ஆறு பெரிய தூண்களுடன் எண்பது அடியில் பிரமாண்டமாக இருக்கிறது.

இந்த அரண்மனையில் ஒரு வட்ட வடிவ சிறை உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசிப் தனது சகோதரர் முராத்தை இந்த இடத்தில் தான் சிறை வைத்து கொன்றிருக்கிறார். குவாலியர் நகரில் நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அக்பரது அவையில் பாடகராக இருந்த தான்சேனின் கல்லறை, சாஸ் பாஹு கோவில், ஜெய் விலாஸ் அரண்மனை என்று பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

மேலும் செய்திகள்