பள்ளிகொண்டாவில் பரபரப்பு அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை எந்த ஆவணமும் சிக்காததால் திரும்பிச்சென்றனர்

பள்ளிகொண்டா அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-04-17 22:30 GMT

அணைக்கட்டு, 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11.48 கோடி கைப்பற்றப்பட்டது. அங்கு வாக்காளர் பட்டியலும் இருந்தது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க திட்டமிடப்பட்டது தெரியவந்ததையடுத்து நேற்று முன்தினம் பிரசாரம் முடிந்த நிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் பள்ளிகொண்டாவை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான சுப்பிரமணி (வயது 64) என்பவர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இருந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேலூர் தொகுதி பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று காலை 8 மணிக்கு பள்ளிகொண்டா யாதவர் தெருவில் உள்ள இவரது வீட்டிற்கு திடீரென பறக்கும்படையினர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அது குறித்த தகவல் அறிந்ததும் கட்சியினரும் அங்கு திரண்டு வந்தனர். ஆனால் சோதனையில் பணமோ, ஆவணங்களோ சிக்கவில்லை. இதன்பின் பறக்கும்படையினர் திரும்பிவிட்டனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் 7 பேர் அடங்கிய வருமான வரித்துறையினரும் சுப்பிரமணியின் வீட்டிற்கு சென்றனர். சுமார் அரைமணி நேரம் அவர்கள் வீட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் ஒன்றும் சிக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் பறக்கும்படையினரும், வருமான வரித்துறையினரும் அடுத்தடுத்து அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்