3,200 அடி உயரத்தில் உள்ள போதமலை கீழூருக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச்சுமையாக கொண்டு சென்ற அதிகாரிகள்

ராசிபுரம் அருகே, 3,200 அடி உயரத்தில் உள்ள போதமலை கீழூருக்கு தலைச்சுமையாக வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

Update: 2019-04-17 22:45 GMT
ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை என 3 மலைகிராமங்கள் உள்ளன. போதமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு பாதை வசதி இல்லை. கரடுமுரடான நடைபாதைதான் உள்ளது.

இந்த பகுதி மலைவாழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக ராசிபுரம் அருகே வடுகம் கிராமத்தில் உள்ள போதமலை அடிவாரத்தில் இருந்தும், புதுப்பட்டி மலை அடிவாரத்தில் இருந்து கெடமலைக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச்சுமையாக ஒவ்வொரு தேர்தலுக்கும் கொண்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக கீழூர் வாக்குச்சாவடிக்கும், கெடமலை வாக்குச்சாவடிக்கும் நேற்று காலையில் ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட வழங்கல் அதிகாரியுமான சந்திரா, சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான சாகுல் அமீது ஆகியோர் டெம்போ வேனில் வாக்குப்பதிவு எந்திரங்களையும், இதர பொருட்களையும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

கீழூர் மற்றும் கெடமலை வாக்குச்சாவடி மையங்கள் தரை மட்டத்தில் இருந்து 3,200 அடி உயரத்தில் உள்ளது. கீழூர் வாக்குச்சாவடி மையத்தில் 851 வாக்காளர்களும், கெடமலை வாக்குச் சாவடியில் 318 வாக்காளர்களும் உள்ளனர்.

நேற்று காலை கீழூருக்கு வடுகம் கிராமத்தில் உள்ள போதமலை அடிவாரத்தில் மண்டல அலுவலர் பாஸ்கரன், வாக்குச்சாவடி மைய அதிகாரி ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் 2 பேலட் யூனிட், 1 கண்ட்ரோல் யூனிட், 1 விவிபேட் போன்ற வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை கரடுமுரடான பாதையில் தலைச்சுமையாக கொண்டு சென்றனர். இவர்களுக்கு உதவியாக மலைவாழ் மக்களும் உடன் சென்றனர்.

அதேபோல் புதுப்பட்டியில் இருந்து கெடமலைக்கு மண்டல அலுவலர் கனகராஜ், வாக்குச்சாவடி மைய அதிகாரி சீனிவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் தலைச்சுமையாக வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்றனர். இவர்களுக்கு உதவியாக மலைவாழ் மக்கள் சிலர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்