குடிநீர் வழங்காததை கண்டித்து கூடலூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் வழங்காததை கண்டித்து கூடலூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-04-17 22:45 GMT
கூடலூர்,

கூடலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஹெலன் பல்மாடி, ஆத்தூர், 27-வது மைல் உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கூடலூர் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆறுகள், தடுப்பணைகள் வறண்டு விட்டன. வனப்பகுதி பசுமை இழந்துள்ளதால், வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் கூடலூர் நகருக்கு குடிநீர் வழங்கும் பணியும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

பாண்டியாறு திட்டத்தில் இருந்து சில பகுதிகளுக்கு மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேல்கூடலூர், கோக்கால், நடுகூடலூர், கோத்தர்வயல் உள்பட பல இடங்களுக்கு 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நகராட்சி லாரிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இருப்பினும் போதுமானதாக இல்லை. அனைத்து தடுப்பணைகளும் வறண்டு விட்டதால், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

இந்த நிலையில் மேல்கூடலூர், கோக்கால், நடுகூடலூர் மற்றும் 1½ சென்ட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று காலை 10 மணிக்கு கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தங்கள் பகுதிக்கு 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நகராட்சி பணி மேற்பார்வையாளர் பிரபாகரன், குடிநீர் குழாய் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சில வீடுகளுக்கு மட்டும் தினமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு 15 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்கப்படவில்லை. வரி முறையாக செலுத்தியும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதிய குடிநீர் வழங்கப்படுவது இல்லை என பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர். அப்போது தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. இதனால் லாரிகளில் குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே கூடுதலாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அலுவலர்கள் உறுதி அளித்தனர்.

இதை ஏற்று முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்