தொழிலாளி தவறி விழுந்து சாவு: கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம்

தொழிலாளி தவறி விழுந்து இறந்ததை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-17 22:15 GMT
வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 3, 4-ம் அணு உலை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதில் சப்-காண்டிராக்ட் எடுத்து பணிகளை செய்து வருபவர் ராமச்சந்திரன். இவரிடம், தேவர்குளம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த இன்பராஜ் (வயது 34) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இன்பராஜ் அங்குள்ள ஒரு எந்திரத்தின் வால்வுகளை சரிபார்த்தபோது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த இன்பராஜ் மனைவி ஜெப அன்னபூர்ணம் மற்றும் அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து, இன்பராஜின் உடலை வாங்க மறுத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஜெப அன்னபூர்ணம் மற்றும் அவருடைய உறவினர்கள் கூடங்குளம் 3, 4-ம் அணு உலைகள் மெயின் வாசல் முன்பு கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், கூடங்குளம் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்பராஜின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் 2 குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் சட்டப்படி உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் இன்பராஜின் உறவினர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உடலை பெற்றுக் கொண்டனர். சுமார் 3 மணி நேரமாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்தால் 1, 2-ம் அணு உலைகள் மெயின் கேட் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்